ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று கடை திறந்த முதல் நாளில் சலுகை விலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த கடையை கலெக்டர் இழுத்து மூடி சீல் வைத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பை உரிமையாளர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் உடனடியாக காவல்துறையினர் வந்து பிரியாணிக்காக காத்திருப்பவர்களை வீட்டுக்கு போங்கள் என்று அறிவுறுத்தினார்.
எந்தவித அடிப்படை வசதி கூட செய்து தராமல் சலுகையை அறிவித்த கடைக்காரருக்கு கண்டனம் தெரிவித்த கலெக்டர் உடனடியாக கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அந்த கடை சீல் வைக்கப்பட்டது. கடை திறந்த முதல் நாளே கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.