தேமுதிக வில் உள்ள அதிகாரங்கள் யாவும் எல். கே. சுதீஷிடம் இருந்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கைக்கு மாறிவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தேமுதிக வில் விஜயகாந்திற்கு அடுத்த இடத்தில் அனைத்து அதிகாரங்களும் உள்ள நபராக விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் இருந்து வந்தார். விஜயகாந்த் உடல்நலமில்லாமல் கடந்த சில வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் முக்கியமான முடிவுகள் அனைத்தும் சுதிஷால் எடுக்கப்பட்டன.
சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்காவிற்கு சென்றபோது கூட்டணித் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுதீஷ் தலைமையிலேயே பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதக் காலமாக பாஜக மற்றும் அதிமுக வோடுக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரால் தேமுதிகவிற்கு தேவையான தொகுதிகளைப் பெற முடியவில்லை.
அதனால் கடுமையான அதிருப்தியடைந்த தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக வோடுக் கூட்டணி அமைக்கலாம் எனக் கூறியுள்ளனர். அதையொட்டியே காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் விஜயகாந்துடனான சந்திப்பு. இதையடுத்து திமுகப் பக்கம் செல்ல தேமுதிக சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை இந்தக் கூட்டணி அமையும் பட்சத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொறுப்பு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனிடம் ஒப்படைக்க முடிவு செய்ய்ப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அவருக்கு கிடைக்கும் நல்ல வரவேற்பே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.