ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தி வரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும், உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனது பினாமிகள், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் வேலுமணியும் ஆதாரத்துடன் சிக்கியுள்ளனர். ஆனாலும், தாங்கள் எந்த தவறு செய்யவில்லை என அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காமலும், அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமலும் முதல்வர் பழனிச்சாமி அமைதி காத்து வருகிறார்.
ஆனால், இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதோடு, விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதுபோக, அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக தரப்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், திமுக தரப்பு நீதிமன்றம் செல்லும் எனத் தெரிகிறது.
எனவே, விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரிடமிருந்து அமைச்சர் பதவிகளை பிடுங்குவது நல்லது என பழனிச்சாமியிடம் ஓ.பி.எஸ் தொடர்ந்து கூறி வருகிறார் ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால், பதவிகளை நீக்கினால் அவர்கள் தங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என கருதும் முதல்வர் அமைதி காத்து வருவதாக தெரிகிறது.
இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரிய வர ஓ.பி.எஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். அவருக்கு தைரியம் இருந்தால் என்னிடம் நேரில் சொல்லட்டும். அவர் ஊழலே செய்யவில்லையா? அவருக்கு எப்படியெல்லாம் முறைகேடான வழியில் பணம் வருகிறது என நான் லிஸ்ட் கொடுக்கட்டுமா? இங்க எந்த அமைச்சர் நேர்மையா இருக்காங்க? அப்படி ஒருத்தர் இருந்தா எனக்கு காட்டிட்டு என் பதவியிலிருந்து நீக்கட்டும் என அந்த அமைச்சரில் ஒருவர் கடும் கோபமாக பேசியதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.