தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உடுமலைப்பேட்டை பகுதி மக்கள், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆனைமலை நல்லாறு அணைக்கட்டும் திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அந்த பகுதியில் போராட்டம் நடத்த சென்றுள்ளார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் மாட்டு வண்டியில் பயணம் செய்கிறார். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேமுதிக தொண்டர்கள் சூழ மாட்டுவண்டியில் அவர் பயணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போராட்டத்தில் விஜயகாந்துடன் உடுமலைப்பேட்டை தேமுதிக மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.