விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால் தான் அதிமுக போட்டியிடவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடைத் தேர்தல் சுதந்திரமாக நடக்காது என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பல இடங்களில் டெபாசிடை இழந்தது என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், விக்ரவாண்டி இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால் தான் அதிமுக போட்டியிடவில்லை என்று ஆர்.எஸ் பாரதி கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுக தான் என்றும் 1992 இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார். எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வாக்களிக்க மாட்டார்களா?, வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் கலைஞர். எனவே வன்னியர் மக்களே கலைஞர் செய்த நன்மையே திமுகவிற்கு வெற்றியைத் தேடித் தரும் என்று ஆர்.எஸ் பாரதி குறிப்பிட்டுள்ளார்.