விழுப்புரத்தில் பாஜக மாவட்ட தலைவர் மீது பாலியல் புகார் அளித்த மகளிர் அணி செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரத்தை சேர்ந்த காயத்ரி பாஜக மாவட்ட மகளிரணி செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவரை பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மகளிரணி பொதுச்செயலாளர் பதவி வாங்கி தருவதாக ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 5 லட்ச ரூபாய் பணம் வாங்கியதாகவும் பாஜக மாநில தலைமைக்கு புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காயத்ரி பாஜக மாவட்ட தலைவர் கலிவரதனுடன் பேசியதாக ஆடியோ பதிவுகள் பல இணையத்தில் வெளியானதால் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் காயத்ரி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாகவும், கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அவருடன் தொடர்பில் இருக்க வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைமை தெரிவித்துள்ளது