சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் ஏன்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலைத்திருக்கிறது, அது நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை அதன் சக்தி குறையவில்லை, அது கரையை நோக்கி வந்து கொண்டே வருகிறது. நாளை காலை அது கரைக்கு அருகில் வரும்போது, மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கெனவே பெய்து வரும் மழையின் அளவையும் கருத்தில் கொண்டு, ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கக்கூடும். இதன் விளைவாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது."
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்காததால், அதன் நகர்வு மற்றும் மழை நிலைமைகளை முன்னிட்டு சில பகுதிகளில் 20 செ.மீ மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது. ரெட் அலர்ட் என்பதன் பொருள், மழை பெய்யும் நேரம், அளவை குறித்து முழுமையான எச்சரிக்கை. காலஅளவில் இதை 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரமாக கணக்கில் கொள்ள வேண்டும். மழைத் தாக்கத்தை கணிப்பது, அதற்கான முன்னெச்சரிக்கையாகவே இந்த அலர்ட் அறிவிக்கப்படுகிறது," என்றார்.