திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் மக்களுக்கு புதிய திட்டங்கள் எதையும் செய்யவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட உள்விவகாரங்கள் காரணமாக கடந்த சில நாட்கள் முன்பு வரை கட்சி பிரச்சினைகளில் உழன்று வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது அதிலிருந்து விலகி ஆளும் கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று சமத்துவ பொங்கலை கொண்டாடினார் எடப்பாடியார். பின்னர் அங்கே பேசிய அவர் “இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் என்ன நன்மைகளை அனுபவித்தார்கள். ஏழை எளிய மக்களுக்கென்று குறிப்பிடும்படி எந்த நல்ல திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக மக்களின் மீது துளியும் அக்கறை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது.
சமீபமாக பல நியாய விலைக்கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நியாய விலைக்கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு பொருட்கள் சரியாக வழங்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் திட்டமிடலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.