Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பொன்முடி வழக்கின் பின்னணி என்ன? - முழு விவரம் இதோ..!

பொன்முடி வழக்கின் பின்னணி என்ன? - முழு விவரம் இதோ..!
, வியாழன், 21 டிசம்பர் 2023 (11:29 IST)
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்...
 


2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரிக் கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைத் தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.

webdunia

 
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடியின் மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்குச் சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில்கொள்ளவில்லை என வாதிட்டார்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27-ம் தேதி வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துச் சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார்.  மேலும், 64.90% வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தது நிரூபணம் ஆகியிருப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இன்றைய தினம் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரேன் சக்கரத்தில் தவறி விழுந்து விபத்து! - கணவன் கண் முன்னே மனைவி பலி!