திருமாவளவனால் முதல்வராகவே முடியாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியிருந்த நிலையில், திருமாவுக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சியில் பங்கு குறித்து சமீபமாக பேசி வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருமாவளவனை விமர்சித்து பேசியிருந்தார். இதுகுறித்து அவர் பேசியபோது, திருமாவளவன் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்றும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்தவர்தான் திருமாவளவன் என்றும் விமர்சித்திருந்தார்.
மேலும் திருமாவளவன் முதல்வராக கனவு காண்கிறார். ஆனால் அந்த கனவெல்லாம் நடக்காது என்றும் பேசியிருந்தார்.
எல்.முருகனின் இந்த கருத்தை விமர்சித்து திருமாவளவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “திருமாவளவனுக்கு முதலமைச்சராவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. அவர் முதல்வரானால் ஒரு தமிழனாக, தம்பியாக என்னை விட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்,முருகன் இணை அமைச்சர் ஆகும்போது திருமாவளவன் முதலமைச்சராக கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தான் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும், ஆனால் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் கூறிய சீமான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தன்னுடன் விவாதம் செய்ய தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K