Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இழந்த கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?, ரேஸில் முன்னணியில் இருப்பவர் யார்?

இழந்த கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?, ரேஸில் முன்னணியில் இருப்பவர் யார்?
, புதன், 30 டிசம்பர் 2020 (23:30 IST)
துறையூர் தொகுதி - இழந்த கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?, ரேஸில் முன்னணியில் இருப்பவர் யார்?  
 
 
துறையூர் தொகுதி 2006 பொதுத் தேர்தல் வரை உப்பிலியபுரம் (பழங்குடியினர்) தொகுதியாக இருந்து, மறுசீரமைப்பில் துறையூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. மலைக்கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் விவசாயிகள் அதிகம். குறிப்பிடும்படியான தொழிற்சாலை எதுவும் இல்லை.
 
திருச்சி மாவட்ட மக்களின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புளியஞ்சோலை, பச்சைமலை ஆகியன இந்தத் தொகுதிக்குள் வருகின்றன. குறிப்பாக, திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்ட பகுதிகள் அடங்கிய பச்சைமலையில் மரவள்ளி கிழங்கு, தேன் எடுத்தல் ஆகிய பிரதான தொழில்கள்.
 
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. அதிமுகவின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி தற்போது திமுக வசம் உள்ளது. இதற்கு காரணம் வேறு யாரும் இல்லை சொந்தக் கட்சிக்காரர்களே என்று வேதனையை வெளிப்படுத்துகின்றனர் அதிமுகவினர்.
 
குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ., இந்திரா காந்தி மற்றும் மைவிழி ஆகியோரை அந்த தொகுதியினர் கை காட்டுகின்றனர். துறையூரின் அடையாளங்களுள் ஒன்றான சின்ன ஏரி, தற்போது கழிவுநீர் குளமாக மாறியுள்ளது. 2011-ல் இந்திரா காந்தி, எம்.எல்.ஏவாக பதவியேற்றதும் கழிவு நீர் குளமாக மாறிப்போன சின்ன ஏரியை தூய்மைப்படுத்தி படகு சவாரி விடுவேன் என்று உறுதியளித்தார். ஆனால், ஒரே ஒரு நாள் மட்டும் பெயரளவிற்கு தூர்வாரி மீடியா மற்றும் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்ததோடு சரி, அதன் பிறகு அந்தப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
 
 
 
இந்திரா காந்தி
 
இந்திரா காந்தி,  ஏரியை தூர் வார்வதாகக்  கூறி பல லட்சங்களை ஆட்டையை போட்டு கல்லா கட்டிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளை தரக்குறைவாக பேசுவது, ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தங்களில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கறாராக கேட்டு மிரட்டியது,  டாஸ்மாக் பார் குத்தகையை திமுகவினரிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கொடுத்தது, துறையூர் நகரச் செயலாளர் ஜெயராமனை செருப்பால் அடிப்பேன் என்று கூறியது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஈபிஎஸ்-ஓபிஎஸ் அபிமானியாக இல்லாமல் சசிகலா பக்கம் நின்றது, குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தினகரனின் விசுவாசியாக வலம் வந்தது, கட்சி கட்டுப்பாட்டை மீறி திருச்சி மாவட்ட அ.ம.மு.க., மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தது, சசிகலாவின் உறவினரான திருச்சியைச் சேர்ந்த இன்ஜினியர் கலியபெருமாள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அனைத்து காரியங்களையும் முன்நின்று செய்து கொடுத்தது...,என அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஏராளமாக நீள்கின்றன. இதனால் தொகுதி வாசிகள் இந்திரா காந்தி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இந்திரா காந்தியின் இத்தகைய செயல்பாடுகள் துறையூர் தொகுதியில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கு முக்கிய  காரணமாகக் கூறப்படும் நிலையில், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் தொகுதியை பறிகொடுத்த மைவிழியிடம் ஏராளமான மைனஸ் பாய்ண்ட்டுகள் உள்ளன.
 
உப்பிலியபுரம் பேரூராட்சி தலைவராக இருந்த போது 5ஆவது வார்டு பொதுமக்களை சாக்கடையை போய் குடி என அவதூறாக பேசியது. காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்ட என்று தரக்குறைவாக பேசியது, அவரது கணவர் அதிகார துஷ்பிரயோகம் செய்தது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவரது தோல்விக்கும், திமுகவின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
 
இந்த நிலையில், எதிர்வரவுள்ள தேர்தலில் துறையூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் சீட் வாங்க முயற்சி செய்து வருகின்றனர். ரேஸில் முன்னணியில் இருப்பவர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட - எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெ.அறிவழகன் விஜய் ஆவார். மருத்துவரான இவரது மனைவி மணியம்மையின் சொந்த ஊர் துறையூரை அடுத்த மாராடி ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்டு கிட்டதட்ட துறையூர் தொகுதிக்கான வேட்பாளராக இறுதி செய்யப்பட்ட நிலையில் நூலிழையில் வாய்ப்பு தவறிப்போனது.
 
 
ஜெ.அறிவழகன் விஜய்
 
இருந்த போதிலும் தொகுதியில் எந்த ஒரு நிகழ்வானாலும் அதில் தவறாமல் கலந்து கொள்வது, உதவி என்று நாடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து தருவது, ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவி, பண்டிகை காலங்களில் தொகுதி மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது என தொகுதியிலேயே தங்கி பம்பரமாய் சுற்றி வேலை செய்து வரும் இவரது செயல்பாடுகள் தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, கடந்த முறை நூலிழையில் வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு இந்த முறை நிச்சயம் சீட் கிடைத்துவிடும் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
 
இந்நிலையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியிடம் சீட் கேட்டு பலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
 
 
மு.பரஞ்சோதி
 
ஆனால் பரஞ்ஜோதியோ யாரையும் பகைத்துக்கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்து “கட்சிப்பணிகளை அர்பணிப்புடன், ஈடுபாட்டோடு செய்யுங்கள், உங்களுக்கான பதவி தானாக தேடி வரும்”- என்று கூறி நிர்வாகிகளை தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்தி வேலை வாங்கி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதனிடம் நேசம் துளிர்க்கச் செய்யும் புன்னகை !