கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும் நேரிலும் அரசியல் கருத்துக்களை கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் அவருடைய சகோதரர் சாருஹாசனே கமலும், ரஜினியும் சேர்ந்து கட்சி ஆர்மபித்தாலே 5% ஓட்டுக்கு மேல் கிடைக்காது என்று கூறியுள்ளதால் அரசியல் கட்சியை உடனே தொடங்க அவர் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனக்குள்ள செல்வாக்கை உறுதி செய்து கொள்ள கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கமல்ஹாசன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய கமலிடம் 'ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது உண்மையா? என்ற கேள்விக்கு அவர் மறுப்பேதும் தெரிவிக்காமலும், பதில் கூறாமலும் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் பொதுமக்கள் வெறுப்பில் இருப்பதால் அந்த வெறுப்பை கமல், வாக்காக அறுவடை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்