சமீபத்தில் யூட்யூப் மூலம் பிரபலமடைந்த சித்த மருத்துவர் ஷர்மிகா சொன்ன மருத்துவ முறைகளை பின்பற்றி பாதிப்பு ஏற்பட்டதாக பெண்கள் சிலர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா. சமீபத்தில்தான் சித்த மருத்துவ படிப்பை முடித்த இவர் யூட்யூப் சேனல்கள் பலவற்றில் சித்த மருத்துவம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. முக்கியமாக எடை குறைத்தல், கர்ப்பம் தரிப்பது போன்றவற்றை குறித்து அவர் பேசிய கருத்துக்களுக்காக இந்திய மருத்துவ ஆணையரகம் அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
இதற்குபின் தற்போது ஷர்மிகா சர்ச்சை பேச்சை குறைத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவர் முன்னர் வழங்கிய மருத்துவ குறிப்புகள் தற்போது மீண்டும் அவருக்கு பிரச்சினையை அளித்துள்ளது. யூட்யூப் வீடியோக்களில் அவர் சொன்ன மருத்துவ அறிவுரைகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2 பெண்கள் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.