Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது- சசிகலா

அம்மா  ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு  பாதுகாப்பு கிடைத்தது- சசிகலா

Sinoj

, வியாழன், 7 மார்ச் 2024 (14:21 IST)
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம். இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைத்தது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் 2 பேரை போலீஸார் கைது, அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளதாவது:

''புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மன்னிக்கமுடியாத தவறை இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர, புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் கடந்த 2-ஆம் தேதியன்று வீட்டருகில் விளையாடி கொண்டிருந்த நிலையில் காணாமல் போன 9 வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்து கொல்லப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், இறந்து போன சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்.

சிறுமியை சிதைத்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், புதுச்சேரியில் போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம். இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைத்தது.

நாட்டின் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும். பெண்களை இழிவுப்படுத்துபவர்களை, துன்புறுத்துபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களை உடனே கண்டறிய வேண்டும். இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசைக் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா : விருதுகளை அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்




X
X
X
X