பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பல ரவுடிகள் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சீசிங் ராஜாவின் 3 மனைவிகள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வருவதாக தகவல்கள் கிடைத்ததால், அவர் அங்கு பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில், அவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கியிருப்பதாக கணித்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை நேற்று சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
சிறப்புப் படையினர் சீசிங் ராஜாவை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை நீலாங்கரை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டார். அதன்படி, ஆயுதத்தை கைப்பற்ற அவர் குறிப்பிட்ட இடத்திற்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர்.
அங்கு, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சீசிங் ராஜாவை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்ட்டரில் அவர் உயிரிழந்தார், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.