ஒன்றிய பா.ஜ.க. அரசின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர்; பா.ஜ.க.வினர் செய்யும்திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர்! என்று திமுகவினருக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளிக்கக் கூடாது. 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பிரதமர்திரு. நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. ஆனால் பா.ஜ.க. என்ற கட்சியின் கஜானா மட்டும் அதிகமாக நிரம்பியது. ஊழல்களும், முறைகேடுகளும் மட்டுமே நடந்தன.
பாரத்மாலா திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் சுங்கச் சாவடி கட்டணங்கள், ஓய்வூதியத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்களில் 7.50 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக
சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டது.
இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க. நான்கு மாதகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனை அணைக்க முதுகெலும்பு இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.
இதனை எல்லாம் பேசவிடாமல் திசைதிருப்ப பா.ஜ.க. முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஒற்றை ஆட்சி என சர்வாதிகாரப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட ஆபத்தான முயற்சிகளைப் பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டியது காலத்தின் தேவை.
பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; அவர்களுக்கு முடிவுரை எழுதி இந்தியா கூட்டணியை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து, நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க, எவ்வித கவனச் சிதறலுக்கும் இடமளிக்காமல், அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.