கன்னியாகுமரியில் ஒரு வாலிபர் பேய் துரத்துவது போல் கனவு கண்டு ஓடிச்சென்று கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள அயினிவிளை பகுதியில் கோவில் அர்ச்சகர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியே இருந்த கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளார். உடனடியாக அந்த கிணற்றை ஓடி சென்று எட்டிபார்த்த அர்ச்சகர் அதிர்ச்சியடைந்தார்.
இரும்பு வலைக்கதவு போட்டு மூடப்பட்ட, சிறிதளவே தண்ணீர் இருந்துள்ள அந்த கிணற்றில் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளார். இந்நிலையில் உடனடியாக அர்ச்சகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை கிணற்றிலிருந்து மீட்டனர்.
அந்த இளைஞரை காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, பேய் துரத்துவது போல் கனவு கண்டதால் ஓடி வந்து கிணற்றுக்குள் விழுந்ததாக கூறியுள்ளார். ஆனால் அக்கிணற்றுக்குள் புதையல் ஒன்று இருப்பதாக பல நாட்களாக அப்பகுதியில் ஒரு வதந்தி உலா வருவதாக கூறப்படுகிறது.