கரூர் இளைஞரை ஆபாச குழுவில் இருப்பதாக மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் தாந்தோணி மலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் தாம்பரம் சைபர் க்ரைம் போலீஸ் என சொல்லி பேசிய நபர், இளைஞரின் மொபைல் எண் ஆபாச வீடியோ பகிரும் குழுவில் உள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர். பின்னர் அபராதம் கட்ட வேண்டும் என சொன்ன அவர்கள், அபராதம் செலுத்தாவிட்டால் கரூர் போலீஸை வைத்து கைது செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர்கள் கேட்ட பணத்தை இளைஞர் அனுப்பி உள்ளார். மீண்டும் இளைஞரை தொடர்பு கொண்ட அந்த கும்பல் மீண்டும் பணம் கேட்டுள்ளனர். ட்ரூ காலரில் அந்த எண்ணின் பெயரை பார்த்தபோது இளைஞருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் உடனடியாக கரூர் சைபர் க்ரைமில் இளைஞர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் போலி சைபர் க்ரைம் போலீஸாக நடித்த கோவையை சேர்ந்த 4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.