ஆஸ்திரேலியாவில் பண்ணை வீடு ஒன்றில் பல மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள விம்பிலா என்ற நகரில் சில மாதங்கள் முன்னதாக ஒரு நபர் காணாமல் போயுள்ள்ளார். அவரை போலீஸ் பல நாட்களாக தேடி வந்த நிலையில் அவர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அவரை தேடி போலீஸார் அங்கு சென்றபோது பண்ணை வீட்டில் இருந்த பெண் உட்பட 3 பேர் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அவ்விடம் வந்த பக்கத்து பண்ணை வீட்டை சேர்ந்த நபரையும் அந்த கும்பல் சுட்டுக் கொன்றது.
இதனால் கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு பண்ணை வீடு சுற்றி வளைக்கப்பட்டது. மாலை தொடங்கி நள்ளிரவு வரை சுமார் 6 மணி நேரமாக நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இறுதியாக பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த பெண் உள்பட மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸார் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. போலீஸாரை தாக்கிய அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.