காலை, மாலை இருவேளைகளிலும் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும்.
தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.
களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதை யூட்டும் பொருட் கள், புகைப் பிடித்தல் தவிர்க்க வேண்டும்.
படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது ``சாமி சரணம்‘’ என்று தொடங்கி பின் விடைபெறும் போது ``சாமி சரணம்‘’ எனச் சொல்ல வேண்டும்.
விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.