சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.
சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.
சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.
சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.
சூரியன் பச்சை நிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.
சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில்ள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன.
சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள்.