சோறுதான் சொக்கநாதர், 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு.
நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே அன்னத்தின் வடிவில் இருக்கிறான். அவனே நமக்குப் படியளப்பவன். எனவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.
ஈசனே அன்னத்தின் வடிவில் அருள்புரிகிறார். ஈசன் இல்லாமல் எதுவும் இல்லை. உணவளித்து நம்மை வாழவைக்கும் ஈசனுக்கு நன்றிக்கடனாக அன்னாபிஷேகத்தைச் செய்கிறோம். வானவியல் சாஸ்திரத்தின்படி துலா மாத பௌர்ணமி தினத்தின் போது தான் சந்திரன் அதிகப் பொலிவாகத் தோன்றுவான். சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி. அதனால் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும் அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால் சகலமும் ஒடுங்கிவிடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால் அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும்.
அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும்.
அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது. எந்தவித தோஷங்களும் நெருங்காது. சொர்கத்திற்கு போகும் வரை சோறுக்கு தட்டுப்பாடு வராது என்பது நிச்சயம்.