உலக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது முதலில் ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம வடிவம் மூன்றாவது காரண வடிவம் என்பதாகும்.
ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும்.
காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும் சூட்சம வடிவம் என்பது புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர வடிவாகும் .
மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள் இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும் இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும் அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன இந்த் மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது.
ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும் அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது முடிவும் கிடையாது அப்படி பட்ட அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும்.