அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது. மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப் படுகிறது.
சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள் புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராண கூற்று.
பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.
மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக்குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.
மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.
மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளி கொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார். வல்லாள மகா ராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது.
மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம். மாசிமக திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.
மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான். இத்தகைய சிறப்புகளைக் கொண்டது தான் மாசி மாதம்.