புராண காலத்தில் பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, திடீரென்று இறைவனின் பாரம் அதிகமாயிற்று.
அதனை உணர்ந்த சேஷன் பகவானிடம், நாராயணா.. திடீரென்று தங்கள் உடல்பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், "ஆதிசேஷா... நான் ஈசனின் திருதாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகத் தான் எனது உடல்பாரம் அதிகமாயிற்று என்று கூறி அந்த அழகை அவரிடம் வர்ணித்தார் திருமால்.
இதனைக் கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன், கேட்கும் போதே இவ்வளவு பேரானந்தமாக இருக்கும் இந்த அழகை நேரில் காண விரும்பி அதற்கான மார்க்கத்தை உரைக்கும்படி திருமாலிடம் வேண்டினார். அதற்கு அவர் ஆதிசேஷனை பூலோகத்திற்கு சென்று தில்லையில் தவம் புரிந்தால் அவனுக்கும் அது சித்தியாகும் என்றார்.
அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் ஒரு ரிஷி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து உரிய பருவத்தில் தில்லையில் தவம் இயற்றத் தொடங்கினார். அவரோடு வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் இறைவனின் திருத்தாண்டவ தரிசனம் வேண்டி அவரோடு சேர்ந்து தவம் செய்தார்.
இருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நன்னாளில் அவர்களுக்கு தரிசனம் அளித்து, தாண்டவம் ஆடி மகிழ்ந்து, அனைவரையும் மகிழச் செய்தார்.