சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி வரவிருக்கின்றது. அதாவது நாளைய தினம்.
மகா சிவராத்திரி என்பது சிவபெருமான் வழிபாட்டுக்கு உகந்த, மிகப் புனிதமான இரவுப் பொழுதாகும். இந்த காலப் பொழுதில், சிவபெருமானே நம் உலகிற்கு இறங்கி வருகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவனுக்கும் சிவவழிபாட்டுக்கும் உரியதாக விளங்குவதால், இது சிவராத்திரி என்றே அழைக்கப்படுகிறது. அவ்வாறே மிகவும் பக்தியுடன் மக்களால் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானே தன் முழு ஆற்றலுடன் நம்மிடையே இருக்கும் அந்தப் புண்ணிய இரவு, இதனால் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே சிவராத்திரி, நம் பாவங்களைக் களையக்கூடியது; நோய்களையும், கடன்களையும் தீர்க்க வல்லது; மேலும், வளத்தை அளித்து, நம் விருப்பங்களை நிறைவேற்றக் கூடியது என புரணக் கதைகள் கூறுகின்றன.
சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் நாளாகும். இது தேய்பிறை காலங் களில் வரும் சதுர்தசி நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிவராத்திரி தமிழ் மாதமாகிய மாசியில் வரும் பொழுது, அது மிகவும் புனிதத் தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மாசி சிவராத்திரியே மகா சிவராத்திரி என்று மக்களால் நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது. அன்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள், சிவ ஆலயங்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.