எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது.
திங்கட்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர்மாலை அணிவித்து ஜவ்வரிசிப்பாயசம், அன்னம் படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை ராகுவேளையில் (மாலை 3-4.30) பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம், செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும்.
புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர். கிரகிப்புத்திறன் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். புதன்கிழமை காலை 10.30- 12க்குள் பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும்.
வெள்ளிக்கிழமை ராகுவேளையில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, தாமரை மலர் மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும், தடையின்றியும் திருமணம் கைகூடும்.