நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் துர்க்கையை காத்யாயனி என்று ஆராதனை செய்வர். உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை.
காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். இவளையே மகிஷாசுர மர்த்தினி என்றும் கூறுவர்.
கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் விரும்பும் படி, மணாளனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.
நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபட வேண்டியவள் காத்யாயினி, இவளே மகஷாசுர மர்த்தினியும் ஆவாள் கையில் வாளுடன் சிம்மம் அமர்ந்திருப்பவள். ஆக்கினை சக்கரத்தின் இறைவியாக திகழ்கிறாள்.
நவராத்திரியின் ஆறாம் நாளில் ஏழு வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை காளிகா தேவியாக வழிபடவேண்டும். பருப்பைக் கொண்டு பாவைகள் அலங்காரமாக “காளிகா தேவி”யையோ, அல்லது தேவி நாமத்தையோ கோலமாக போட்டு, குங்குமம் பொட்டு வைத்து, செவ்வரளிப் பூ, செம்பருத்தி பூ போன்ற சிவந்த மலர்களால் அலங்கரித்து, தும்பை பூ இலையால் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக ஆரஞ்சு பழம், கடலைப்பருப்பு சுண்டல், தேங்காய் சாதம் படைத்து பூஜிக்க வேண்டும்.
மந்திரம்: ஓம் காத்யாயன்யை நம:
யோகிகள் இவள் அருளை துணை கொண்டு ஆறாம் சக்ரமான ஆக்ன்யா சக்ரத்தை அடைவர். இந்த சக்ரத்தை முக்கண் சக்கரம் என்று கூறுவர்.
இவளின் தியான மந்திரம்: “சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன் காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி”
ஒளி வீசும் (ஹசூஜ்) வாளைக் கொண்டவளும், கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிப்பவளாம் அன்னை காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், எதிரிகளின் தொல்லை முழுமையாக விலகி, வாழ்க்கையில் என்றும் சந்தோஷத்தை நிலைக்கசெய்வாள் தேவி.