நவக்கிரக நாயகர்கள் தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு இடைக்காடர் போரானந்தம் அடைந்தார். ஐயோ என்ன விந்தை இது விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்துள்ளீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள்.
இந்த ஏழையிடம் என்ன இருக்கப் போகிறது வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. இவை எளிய உணவு என்று இகழாதீர்கள். என் உயிரைக் கலந்து நான் தருகிறேன். இவ்வுணவை உண்டு சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள். பிறகு பேசுவோம் என்று தம் குடிசைக்கு வந்த நவக்கிரக நாயகர்களை உபசரித்தார்.
சித்தரான இடைக்காடரின் வேண்டுதலை மறுக்க முடியாது நவக்கிரக நாயகர்களும் அவர் அளித்த வரகு ரொட்டிகளை உண்டு, ஆட்டுப்பாலைப் பருகினார். எருக்கிலைச் சத்து நிறைந்த பால் என்பதால் அதை அருந்தியதும் நவக்கிரக நாயகர்கள் மயங்கி விழுந்தனர். கிரக நாயகர்கள் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டதும் இடைக்காடர் அவை யாவும் எந்தெந்த இடத்தில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்துவிட்டார்.
உடனே வானில் கருமேகங்கள் திரண்டு இருண்டது. மழை பொழிந்தது. வறண்ட பூமி குளிர்ந்தது. ஆறு, குளம், குட்டைகள் என யாவும் நிரம்பி வழிந்தன. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள் தாங்கள் இடம் மாறி அமைந்திருப்பதைக் கண்டு திகைத்தனர். நொடியில் அவர்களுக்கு இது சித்தர் செய்த அற்புதம் என்பதை உணர்ந்தனர். நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கிய இடைக்காடரின் நுண்ணறிவை மெச்சிய அவர்கள் அவர் வேண்டிய வரங்களை அளித்து விடைபெற்றுச் சென்றனர்.