பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம். பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும். பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
அஷ்டமியில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட நன்னாளாகும் நாளாகும். கால பைரவருக்கு சிவப்பு நிற ஆடை சாற்றி, செவ்வரளி மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பம் சாற்றி வணங்க நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.