கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது.
மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித் தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் `பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.
பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்தார். கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம் என்றும் கூறப்படுகிறது..
ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்.
திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடும்ப நலம்.
செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்.
புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.
வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்.
சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.