பிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய கரூர் தமிழகத்தில் தமிழ் மாதமான சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை கரூர் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடுவார்கள்.
ஆடி பிறப்பின் முதல் நாளை தேங்காய் சுட்டு வரவேற்றனர் கரூர் மக்கள் டெக்ஸ்டைல் நகரம் மற்றும் கொசுவலை தயாரிப்பு மட்டுமில்லாமல் பஸ்பாடி தயாரிப்பு நகரமான கரூர் பழங்காலத்தில் வஞ்சி தேசம் என அழைக்கப்பட்டது. பழமையும் புதுமையும் ஆன்மீகமும் நிறைந்த நகரமாக இருக்கிறது கரூர்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் இல்லாத வழக்கமாக கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆறுகள் பாயும் சுற்றுவட்டாரங்களில் தேங்காய் சுடும் விழா ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆடியை வரவேற்கும் வகையில் கரூரில் பல பகுதிகளில் இன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. அதனால் ஆடி 1-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பதும் உண்டு.
மேலும்., ஆடி மாதம் இன்று ஆரம்பம் ஆகிவிட்டது, இனி எல்லா ஊர்களிலும் மாரியம்மன் பண்டிகை நடத்துவார்கள், கூழ் ஊத்துவார்கள், ஆடி 18 வந்தால் காவிரி ஆறு போகின்ற பக்கமெல்லாம் அமர்க்கலமா இருக்கும்.
தேங்காய் சுடுவது தான் இதில் விஷேசம், தேங்காய்க் கண்களை ஓட்டையிட்டு நீரை வடித்துவிட்டு அதில் லேசாக வறுத்தஎள், பச்சரிசி, உடைத்த பச்சைப் பயிறு, நாட்டு சர்க்கரை கலந்த கலவையை ஊசிமூலம் குத்தி முக்கால் பங்கு நிரப்பி சிறிதளவு தேங்காயில் இருந்து வடித்த நீரை சேர்க்க வேண்டும். பின்பு அழிஞ்சில் குச்சியை சரியாகச் செதுக்கி தேங்காய்க் கண்ணில் செருகி தேங்காய், குச்சி ஆகியவற்றுக்கு மஞ்சள் பூசி தேங்காய் சுடவேண்டும்.
சுட்ட தேங்காயை அருகில் உள்ள கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து அங்கே சிறிதளவு வைத்துவிட்டு வழிபட வேண்டும். உள்ளே வைத்த கலவை வெந்து தனி ருசியாக இருக்கும். தேங்காயில் உள்பக்க நாட்டு சர்க்கரையின் இனிப்பும் ஏறி சுட்ட தேங்காயின் மணத்துடன் ருசியாக இருக்கும்.