அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சார்த்தி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாள் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட் டால் புண்ணியமும், பலனும் அதிகமாக கிடைக்கும்.
பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.