ஆடி பெருக்கு தினமான இன்று விரதமிருந்து பூஜைகள் செய்வதால், வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் பன்மடங்கு பெருகும். ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் பூஜை செய்ய:
நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்து மஞ்சளை சேர்க்கவேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்லவேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.
இந்த பூஜையால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். நாடு செழிக்க புனிதமான நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.
காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், பூக்களை ஆற்றில் விடுவர். திருமணம் முடிந்த மூன்றாம் மாதம், பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு மாற்றுவர். இதற்கு தாலி பெருக்குதல் என பெயர். வைகாசியில் திருமணம் முடிந்தவர்களுக்கும் மூன்றாம் மாதம் ஆடி. அவர்கள் ஆடிபெருக்கன்று இச்சடங்கைச் நடத்துவதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறுவர்.
ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது. வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.