ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது.
சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாக வும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். சிதம்பரம் கோயில் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது.
இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப்பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம் அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தல புராணம்.
மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்ப டும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.
திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.
பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.