சித்ரா பெளர்ணமியுடன் சம்பந்தப்பட்ட ஒரு கதை இருக்கிறது. பிருஹஸ்பதி முனிவர் இந்திரனின் குருவாவார். இந்திரனோ தேவர்களுக்கெல்லாம் தலைவர். ஒருமுறை இந்திரன் பிருஹஸ்பதியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவே அவனுக்கு சில படிப்பினையை சொல்லித் தருவதை பிறுஹஸ்பதி நிறுத்தினார்.
குரு இல்லாதபோது இந்திரன் பல தீய செயல்களில் ஈடுபட்டான். குரு மீண்டும் தன் கடமையை செய்ய ஆரம்பித்தவுடன், தான் என்ன செய்ய வேண்டும் என்றும், தன் தவறுகளைக் கண்டு வருந்துவதாகவும் கூறினான். முனிவர் அவனை ஒரு புண்ணிய பிரயாணம் மேற்கொள்ள சொன்னார். மதுரைக்கு அருகில் வந்ததும் தன் தோளில் அதுவரை சுமந்து வந்த பாவ மூட்டைகள் கீழே இறங்குவதைக் கண்டான். இறங்கிய நிலையில் அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இந்த ஆச்சரியத்தைப் பார்த்து அதே இடத்தில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு கோவில் எழுப்பத் தீர்மானித்தான்.
அந்த கோவில் உடனடியாக எழுப்பப்பட்டது. அந்த சிவலிங்கத்தை பூஜிக்க நினைத்தபொழுது சிவபெருமான் அருகில் இருந்த குளத்தில் தாமரை மலர்களைப் பூக்க செய்து இந்திரனுக்கு அருள் புரிந்தார். இப்படி அவர் பூஜித்த நாள் தான் சித்ரா பெளர்ணமி ஆகும். எனவே இந்நாளில் சிவலிங்கத்திற்கு வில்வ இலை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும்.
சித்ரா பெளர்ணமி நாளில்:
சித்ரா பெளர்ணமி அன்று காலை பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியுமான நோட்டு, பேனாவை வைத்து ஒரு தாளில் "சித்திர குப்தன் படியளப்பு "என்று எழுதி, சித்திர் குப்தனை நினைத்து வணங்க வேண்டும்.
சர்க்கரை பொங்கல், ஏலம் ,கிராம்பு, பச்சை கற்பூரம் சேர்ந்த தாம்பூலம், பானகம் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம். பசுவின் பால், மோர் சாப்பிடக் கூடாது. அன்ன தானம், விசிறி, குடை, செருப்பு போன்ற தான தருமங்களை செய்தால் நம் கணக்கில் புண்ணியங்களை அதிகப்படுத்தும்.
இந்நாளில் கிரிவலம வருதல் பன்மடங்கு பலனைத் தரும். கடலில் நீராடுதல் மிகவும் சிறந்தது. அம்பிகையின் வழிபாடு சிறந்தது. சித்திர குப்தனை நினைத்து இந்த சிறு வரிகளை சொல்வது நன்று.
சுவாமி! "அடியேன் செய்த பிழைகள் மலையளவாக இருந்தாலும் கடுகளவாக மாற்றிவிடு.நான் செய்த புண்ணியம் கடுகளவாக இருந்தாலும் மலையளவாக மாற்றி விடு .உன் மனைவியுடன் பிறந்தவள் நான். ஆதலால் பாவங்களை நீக்கி, புண்ணியத்தை மட்டுமே கணக்கில் எடுத்து கொள் "என்று மனதார வேண்ட வேண்டும்.