மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். தினமும் வயிறு நிறைய உண்டு விரதம் அனுஷ்டிப்பது தவறான முறையாகும்.
நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது.
நோன்பை அறிவுறுத்தும் மதங்கள் அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி, கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர்.
நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.
இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து, நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும். இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.
விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப்பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.
விரதம் இருப்பதால் உடலில் நச்சுத்தன்மை நீங்கி, உடல் உறுப்புக்கள் தூய்மை அடைகின்றன.