மண்ணுலகில் பாவம் தீர்க்கும் விரதம், ஏகாதசி விரதம். அதில் ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு பலன் தரும். குறிப்பாக தைமாதம் தேய்பிறையில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க சகல பாவங்களும் நீங்கும்.
அன்றைய திதியில் விரதமிருந்து அன்னதானம் செய்ய அன்னத்துக்குக் குறைவே வராது. பசிப்பிணி போக்கும் அருமருந்து ஷட்திலா ஏகாதசி.
ஷட் என்றால் ஆறு, திலா என்றால் எள். ஆறுவகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்துவது ஷட்திலா ஏகாதசி. அதில் முக்கியமானது எள் சேர்த்து செய்யப்பட்ட அன்னத்தை தானம் செய்வது.
வறியவர்களுக்கு எள்சாதம் தானம் செய்வதன் மூலம் பெரும்பலனை அடையமுடியும். இன்று ஷட்திலா ஏகாதசி திதி. இன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ஆகிய நற்காரியங்களில் ஈடுபடவேண்டும்.
இந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், முன் செய்த பாவங்கள் நீங்கி காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம்.