தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன.
சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.
அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்.
உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டி பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.