வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்யவேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு.
கிருஷ்ணருக்குப் பிடித்த தயிர், வெண்ணெய், அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00-7.00 மணிக்குள் செய்தால் சிறப்பு.
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு; அல்லது பூவை கொடு; இல்லை ஒரு பழத்தைக் கொடு; அதுவும் இல்லையென்றால், கொஞ்சம் தண்ணீர் கொடு; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. "சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்" என்றார் கீதையில் கண்ணன்.
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ண பரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார்.
ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். ஆடல், பாடல், கோலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குழந்தைகள் ஆடுவதைப் பார்க்கும் போது, கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டுப் பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள். கண்ணனின் பரிபூரண அருள் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது.