திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மனக்குறைகளும் கிலேசங்களும் காணாமல் போகும்.
மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரை யும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்.
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிற தே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும்.