பல ஆண்டுகளாக அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் யுவ்ராஜ சிங் நேற்று நடந்த டெல்லிக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 12 ஆவது ஐபிஎல்லின் மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அணியின் வெற்றிக்கு ரிஷப் பண்ட்டின் அதிரடி மற்றும் டெல்லி அணியினரின் பவுலிங் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் மும்பை வலுவான பேட்டிங் இருந்தும் ஒருவரும் நிலைத்து நின்று விளையாடாமல் வந்த வேகத்தில் திரும்பியதால் தோல்வியைத் தழுவ நேரிட்டது. ஆனால் சில ஆண்டுகளாக சரியான ஆட்டத்திறன் இல்லாமலும் அணியில் இடம்பெறாமலும் இருந்த 37 வயதான யுவ்ராஜ் சிங் மீண்டும் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மும்பை ரசிகர்களுக்கும் ஆறுதல் அளித்தது.
இந்தப் போட்டியில் முதலில் யுவ்ராஜ் தடுமாறினாலும் சிறிது நேரத்திற்குப் பிறகு தனது பாணியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை தாக்கி தன்னை நிரூபித்தார். வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அதிக ரன்களைக் குவித்தார். இவருக்குத் துணையாக யாராவது ஒருவர் நின்றிருந்தால் கூட மும்பை அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்திருக்கும். பந்துகளில் டைமிங் செய்வதில் சிறிது தடுமாற்றம் காணப்பட்டாலும் அவரின் இந்த அரைசதம் கண்டிப்பாக மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனவே இந்த ஆண்டு மீண்டும் பழைய அதிரடியான யுவ்ராஜைக் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஆருடம் கூறியிருக்கிறார் யுவ்ராஜ்….. கம் ஆன் யுவி..