ஹர்த்க் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் மீது விதிக்கபட்டிருந்த இடைக்காலத் தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.
ஜனவரி 6 ஆம் தேதி ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் பங்குபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் மற்றும் இந்திய அணியின் ஓய்வறை தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.
இதையடுத்து பாண்ட்யா மற்றும் ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு விளக்கம் அளிக்க வேண்டும் பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியது. மேலும் ஆஸ்திரேலியா தொடரின் பாதியிலேயே இருவரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டனர். மேலும் நியுசிலாந்து தொடரிலும் இருவரும் கழட்டிவிடப்பட்டனர்.
மேலும் பிசிசிஐ சம்மந்தமான எந்த நிகழ்ச்சியிலும் இருவரும் விசாரணை முடியும் வரைப் பங்கேற்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது. இதனால் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாடு திரும்பிய ஹர்திக் மற்றும் ராகுல் இருவரும் ஊடகங்களை சந்திக்காமல் இருந்தனர். மேலும் பாண்ட்யா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கிக் கிடப்பதாக அவரது தந்தை கூறியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி இருவரும் பாண்ட்யாவுக்கும் ராகுலுக்கும் ஆதரவானக் கருத்துகளைக் கூறினர். அவர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்படக் கூடாது எனக் கேட்டுக்கொண்டனர்.
இருவர் மீதானக் குற்றச்சாட்டு தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நம்பிக்கை ஆலோசகர் பி.எஸ்.நரசிம்மாவை சந்தித்துப் பேசிய உச்ச நீதிமன்ற நியமன பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி இருவர் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதாக நேற்று அறிவித்தனர். தடை ரத்து செய்யப்பட்டதால் பாண்ட்யா நடந்து கொண்டிருக்கும் நியுசிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நியுசிலாந்து செல்ல இருக்கிறார்.
இருவர் மீதான விசாரணைத் தேதி பிப்ரவரி 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிகப்பட்டுள்ளது.