இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் ரகசியம் குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் 33 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி ரகசியம் குறித்து அவர் கூறியதாவது:-
திரடியாக விளையாடினால் மட்டும் போதாது, போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்று தோனி கேப்டன் கோஹ்லிக்கு இப்போதும் கற்றுத்தந்து வருகிறார். நான் முதல் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தபோது நொந்துவிட்டேன். ஆனால் கோஹ்லி மீண்டும் என்னை பந்துவீச அழைத்தார். விக்கெட்டை வீழ்த்தினால் ரன் குவிப்பை குறைக்கலாம் என்றார்.
இதுபோன்ற சீனியர்கள் சரியான நேரத்தில் சரியான ஆலோசனை கூறிவதுடன் இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கைகளால் உணர்த்தி வருகின்றனர்.
இதுபோன்று சீனியர்கள் கற்றுத்தருவதும், அதை ஜூனியர்கள் கற்றுக் கொள்வதுதான் இந்திய அணி வெற்றியின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார்.