ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையப் போட்டியின் தோல்வியால் இந்திய அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யவிருப்பதாக இந்திய கேப்டன் கோஹ்லி அறிவித்துள்ளார்.
314 ரன்கள் என்ற இலக்கை நோக்கிச் சென்ற இந்திய அணி நேற்று வெற்றியின் விளிம்பில் வந்து தோல்வியைத் தழுவியுள்ளது. ராஞ்சி ஆடுகளத்தில் 314 ரன்கள் என்பது அடையக் கூடிய இலக்கே. ஆனால் கோஹ்லியைத் தவிர மற்ற அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது.. இந்த தோல்விக்கு ரோஹித், தோனி, தவான் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோரின் பொறுப்பற்ற பேட்டிங்கே முக்கியக் காரணம்.
தோல்விக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் கோஹ்லி ‘ என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. என்னுடைய ஆட்டத்தை நான் விளையாட வேண்டும் என்பது என் மனதில் தெளிவாக இருந்தது. அதைத்தான் நான் மிடில் ஆர்டரிலும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த போட்டியில் மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்கள் வெற்றிபெற தேவையான அணியை உருவாக்குவதாக இருக்கும். ’ எனக் கூறியுள்ளார். அதனால் 4 ஆவது மற்றும் 5 ஆவது போட்டியில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் “அடுத்த இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வளிக்கப்படுகிறது. மொஹமத் ஷமி காலில் ஏற்பட்டுள்ளது. அது சரியாகும் பட்சத்தில் அவர் அணியில் இருப்பார். அப்படி இல்லாத நிலையில், புவனேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் தவானுக்குப் பதிலாக ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்ப்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல ஜடேஜாவுக்குப் பதில் சஹாலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.