Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வினேஷ் போகத்தின் எடை எப்படி அதிகரித்திருக்கும்?.. ஒரே நாளில் மூன்று போட்டி வைத்தது ஏன்? – தமிழக மருத்துவரின் ஆதங்கப் பதிவு!

வினேஷ் போகத்தின் எடை எப்படி அதிகரித்திருக்கும்?.. ஒரே நாளில் மூன்று போட்டி வைத்தது ஏன்? – தமிழக மருத்துவரின் ஆதங்கப் பதிவு!

vinoth

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (15:09 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதை இந்தியாவே கொண்டாடியது. இந்நிலையில் இன்று காலை வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தகுதி நீக்கத்துக்குக் காரணம் அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வினேஷ் போகத்தின் உடல் எடை எப்படி அதிகரித்திருக்கலாம் என தமிழக அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

அவரது பதிவில் “இன்று இந்திய நேரம் நள்ளிரவில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று போட்டி நடக்கும் நாள் காலை அவர் ஐம்பது கிலோ எடைப் பிரிவில் பங்கு பெறுவதால் சரியாக ஐம்பது கிலோ இருக்க வேண்டும் என்றும் அதை விட சில கிராம்கள் கூடுதலாக இருக்கிறார். அதனால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வருகிறது

நேற்றைய தினம் பதினாறு பேருக்கான ரவுண்ட் காலிறுதி, அரையிறுதி ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று இன்று இறுதிப் போட்டி நடக்க உள்ள சூழ்நிலையில் இவ்வாறு சில கிராம் எடை கூடி போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது உள்ளபடி வருத்தம் அளிக்கிறது.

அரையிறுதிக்குப் பிறகு அவரது உடல் எடை 52 கிலோ ஆனதாகவும் அதைக் குறைக்க இரவு முழுவதும் செய்த உழைப்பு பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனக்கு இருக்கும் சில கேள்விகள் இது தான். பதினாறு பேருக்கான நாக் அவுட் ரவுண்ட் காலிறுதிப் போட்டி , அரையிறுதிப் போட்டி ஆகிய மூன்றையும் ஒரே நாளில் அதுவும் எட்டு மணிநேர இடைவேளைக்குள் வைத்திருக்கிறார்கள்.

இதை போட்டி நடத்தும் கமிட்டி ஆராய்ந்து ஒரே நாளில் முக்கியமான நாக் அவுட் மூன்று போட்டிகளை அதிலும் மல்யுத்தம் போன்ற அதிக உழைப்பைக் கோரும் போட்டியை நடத்த முடியுமா? ஆனால் அதையும் மீறி அனைத்திலும் வெற்றி பெற்ற பெண்மணி ஒருவர் அதிலும் இதுவரை சர்வதேச போட்டிகளில் தோற்காத முடிசூடா ராணியாக இருந்த யூய் சசாகி எனும் சாம்பியன் வீராங்கனையைத் தோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடுமையான உடல் உழைப்பை வழங்கியதால் உணவு மற்றும் திரவ/ தாதுஉப்பு உட்கொள்ளல் ஆகியவற்றை சராசரி நபரை விட உடல் கோருவதால் சற்று அதிகமாக உட்கொண்டிருக்கலாம்.  அதீத உடல் உழைப்புக்கு பின் உடலின் எலும்பு போர்த்திய தசைகள் மாவுச்சத்தைக் கோரும். இவ்வாறு மாவுச்சத்தை உட்கொள்ளும் போது அது இன்சுலின் சுரப்பைத் தூண்டும். இன்சுலின் சுரப்பு தூண்டப்படும் போது நமது சிறுநீரகங்கள் சோடியம் உப்பை சற்று அதிகமாக உள்ளே சேமிக்கும். சோடியம் சேமிக்கப்படும் போது கூடவே நீரும் உடலில் சேமிக்கப்படும். மேலும் இன்சுலின் சுரக்கப்படும் போது உடல் கொழுப்பை சேமிக்கும் நிலைக்குச் செல்லும் இதன் விளைவாகவும் இரண்டு கிலோ எடை கூடியிருக்கலாம்.

ஆனால் இத்தகைய உடல் அயர்ச்சி நிலைக்கு முந்தைய நாள் மூன்று முக்கிய போட்டிகளை ஒரே நாளில் எட்டு மணிநேர இடைவெளிக்குள் தொடர்ந்து விளையாடப் பணிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம். போட்டியின் விதிமுறை என்பது விதிமுறை தான். இப்போது நாம் புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை எனினும் மனம் கவலை கொள்வதைத் தடுக்க முடியவில்லை. சகோதரி விக்னேஷ் போகட்டுக்கு இன்னும் வலிமை சேரட்டும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கக் கனவு நிறைவேறட்டும்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி வெட்டி, ரத்தம் வெளியேற்றியும் எடை குறையவில்லை.. வினேஷ் போகத்துக்கு என்ன நடந்தது?