கடந்த சில நாட்களாக மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 17.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற போதிலும், அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் அந்த அணியால் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.