இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலலான பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்ச்சில் இந்தியா இரண்டாவது நாளிலும் தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நேற்று மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடர்ந்து சொதப்பி வந்த ராகுல், விஜய் இருவரையும் போட்டியில் இருந்து நீக்கிவிட்டு புதுமுக வீரர் மயங்க் அகர்வால் மற்றும் பின்வரிசையில் களமிறங்கிய ஹனுமா விஹாரி இருவரையும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கினார்.
ஹனுமா விஹாரி 8 ரன்களிலும், மயங்க் அகர்வால் 66 ரன்களிலும் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழக்க புஜாராவும் கோஹ்லியும் ஜோடி சேர்ந்தனர். புஜாரா வழக்கம்போல நங்கூரம் பாய்ச்ச கோஹ்லி ஆரம்பத்தில் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஆனால் அவரும் பின்னார் நிதானமாகவே விளையாட ஆரம்பித்தார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்தியா 215 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. புஜாரா 68 ரன்களோடும் கோஹ்லி 47 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 2 ஆம் நாளைத் தொடங்கிய இந்திய அணி ஆமைவேகத்தில் விளையாடி வருகிறது. ரசிகர்களின் பொறுமையை சோதித்த புஜாரா 280 பந்துகளில் தனது 17 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுமுனையில் இருக்கும் கோஹ்லி அரைசதத்தைக் கடந்து விளையாடி வருகிறார். உணவு இடைவேளைக்கு முபுவரை வரை புஜாரா 103 ரன்களோடும் கோஹ்லி 69 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இந்தியா 277 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது.