பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடிவரும் நிலையில் அந்த நாட்டி அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது சக வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவோடு தோல்வி மற்றுமல்லாமல் இந்த தொடர் முழுவதுமே மோசமாக விளையாடி பாகிஸ்தான் 9 ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு செல்வது கடினம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இது போல மோசமாக விளையாடினால் மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள். மோசமான விளையாட்டைக் கைவிட்டு நாம் சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வி அடைந்த போது நேரடியாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் வெளிநாடுகளில் தங்கி பின்னர் தாமதமாகதான் நாட்டுக்குள் சென்றனர் என்பது வரலாறு.