உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
நேற்று நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக விளையாடி ஜப்பான் வீராங்கணையை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார். ஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை ஜப்பான் வீராங்கணையை எளிதாக வென்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒரு இந்திய வீராங்கனை உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார். மேலும் பிவி சிந்துவை பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகளவில் வலிமைக்கும், திறமைக்கும் கிடைத்த உண்மையான வெற்றி என்றும் நமது மகளை கொண்டாடுவோம் என்றும் பி.வி.சிந்துவை வாழ்த்தி நடிகர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
முன்னதாக பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் உள்ள பி.வி. சிந்துவின் வீட்டில், அவரின் தாயார், பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர், இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பத்திரிகையாளர்கள் முன் சிந்துவின் தாயார் சிந்துவிடம் வீடியோ காலில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது